சனி, 17 மார்ச், 2012

இலங்கையை சார்ந்த சில முஸ்லிம் அமைப்புகளுக்கு! வேண்டுகோள்!

இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்.

அஸ்ஸலாமு அழைக்கும் அன்பார்ந்த இலங்கை வாழும் இஸ்லாமிய சொந்தங்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று பிரார்த்தித்தவனாக தொடங்குகிறேன்.

ஜெனீவா தீர்மானம் என்பது
நடந்து கொண்டிருப்பது புலிகள் குறித்த விஷயம் அல்ல. போரின் போது வரம்புகளை மீறி அப்பாவி மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை குறித்ததே. ஈழத்திலே நடந்தது ஒரு மிகப்பெரிய இன அழிப்பு என்பதை பற்றி உலகமே பேசும் போது இந்த சூழலில் புலிகள் செய்த கொடுமைகள் பற்றி பேசி அந்த மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்று எந்த ஒரு நடுநிலையான முஸ்லிமும் எண்ண மாட்டான். அப்படி எண்ணுபவன் உண்மையான முஸ்லிமாகவும் இருக்க முடியாது.

எப்போதும் நியாய தர்மங்களை பேசுபவனே, அதை பிரித்து பார்க்க தெரிந்தவனே உண்மையான முஸ்லிமாக, மூமினாக இருக்க முடியும். நமக்கு உலகம் முழுவதும் பாதிப்பு நிகழ்ந்தது அதை யாரும் பேசவில்லை அதனால் அவர்களுக்கு பதிப்பு நடக்கும்போது நாம் வேடிக்கைபார்போம் என்று சொல்வதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. முஸ்லிம்களுக்கு கேடுகளை விளைவித்த புலிகள் போரில் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். அப்படியிருக்க இலங்கையின் மனிதாபிமானம் இல்லாத கோரமான மக்கள் விரோத படுகொலையை கண்டும் காணாதது போல் இருப்பதும், கூடுதலாக அந்த இன படுகொலையை ஆதரிப்பதும் சரியான கருத்து அல்ல.

உங்களுக்கு ஒருவர்மேல் கொண்ட வெறுப்பு அவர்கள் மீது நீதி செலுத்த தடையாக இருக்க வேண்டாம் என்று இஸ்லாம் படித்து தருகிறது. எங்கே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் அவர்கள் நமக்கு எந்த உதவியும் செய்யாவிட்டாலும் குரல்கொடுக்க வேண்டும் இது ஈமானின் ஒரு அங்கம். பதிக்காப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்கும் முகமாக முன்னர் நடந்த கோரசம்பவங்களை நினைவுபடுத்தி தடுப்பது மனிதாபிமானம் அற்ற செயல்.
ஒரு முஸ்லிம் நீதி செலுத்துபவனாக இருப்பான். இலங்கை முஸ்லிம்கள் இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு வகையில் பயங்கரவாததிற்கு துணை போகிறார்கள் என்று கொள்ளலாம்.

இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் வரலாறு முழுவதும் இடையூறுகளை கொடுத்துவந்த யூதர்களை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கொன்று ஒழித்து பழிவாங்கி விடவில்லை. யூதர்கள் இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ்தான் உலகில் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது. மக்கா வெற்றிதான் உலகில் ரெத்தம் இன்றி பெறப்பற்ற ஒரு வெற்றியாகும். மக்காவில் இஸ்லாமிய படைகள் நுழையும் முன்னரே நபி அவர்கள் ( இறைவனின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது உண்டாகட்டும் ) அறிவித்தார்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் இருப்பவர்கள் மீதும் போர் இல்லை என்று. உலகிலேயே கத்தி இன்றி ரெத்தம் இன்றி ஒரு போர் வெற்றி கொள்ளப்பட்ட வரலாறுகளுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள்.

அப்படி மார்க்கத்தை சேர்ந்த நாம் ஒரு இன அழிப்பை, பேரில் கடைபிடிக்க வேண்டிய பன்னாட்டு ஒழுங்குகளை கடைபிடிக்காமல், தடுக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குண்டுகளை பொலிந்து கிட்ட தட்ட நாற்பது ஆயிரம் மக்களுக்கு மேல் கொன்று குவித்து சம காலத்தின் ஹிட்லராக திகழும் ராஜபக்சே அரசின் போர் குற்றங்களை ஆதரித்து அந்த மக்களுக்கு நீதி கிடைக்க விடாது தடுக்கும் இலங்கை முஸ்லிம்களின் நிலை முற்றிலும் தவறானது இது ஒரு வரலாற்று பிழையும் கூட. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஈட்டியை பாய்ச்ச வேண்டாம். குழந்தைகளையும், முதியவர்களையும், நேயாளிகளையும், பெண்களையும், போரில் ஈடுபாடாத மக்களையும், சரணடைந்த மக்களையும் கொல்வது தவறு என்று சொல்லும் சீரிய மார்க்கத்தின் வழிவந்த நாம் எப்படி இந்த இன படுகொலையை ஆதரிக்க முடியும்.

அப்படி நீங்கள் செயல்படுவீர்கள் ஆனால் நீங்கள் இஸ்லாமிய உடைகளை உடுத்தி, இஸ்லாத்தின் பெயர்தாங்கி இஸ்லாத்திற்கு விரோதமாக செயல்படுகிறீர்கள் என்றே அதற்க்கு அர்த்தம். இதை அங்கு வாழும் இஸ்லாமிய தலைவர்கள் அந்த மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். இல்லையேல் இலங்கை முஸ்லிம்கள் மிகபெரிய வரலாற்று பிழையை செய்தவர்கள் ஆவீர்கள். இந்த காரியத்தை நீங்கள் செய்தால் புலிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். அவர்கள் செய்ததற்கு பழிவாங்குகிறேன் என்று சொல்லி அவர்கள் அழிக்கப்பட்ட பின்னரும் அங்கு கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பது என்பது நியாயவான்கள் செய்யும் காரியம் இல்லை.

காலங்கள் மாறும் இதே சிங்கள பேரினவாதமும், அதன் சிந்தனை கூறுகளும் இப்போது உள்ள பிரச்சனை தீர்ந்ததும் அடுத்து அவர்கள் கைவைப்பது முஸ்லிம்கள் மேல்தான் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடவேண்டாம். அதனால் இதுபோன்ற இனவாத அரசு தண்டிக்கப்பட வேண்டும். ஒரு பொதுவான அரசு உருவாக வேண்டும். சிங்கள பேரினவாத இயக்கங்களை தடை செய்யவேண்டும். அதே நேரம் தமிழர்களின் மீள் குடி அமர்வும் அவர்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு சுயாட்சி வழங்கல் வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி அதிகார பகிர்வு அளிக்கப்பட வேண்டும். இதுவே அங்கு பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

இதை விட்டு விட்டு ஒரு பேரினவாத அரசுக்கு இன்று கிடைக்கும் சில இலாபங்களை கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் உதவுவார்களே ஆனால் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்ததும் சிங்கள பேரினவாதத்தின் அடுத்த இரை முஸ்லிம்கள்தான் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடவேண்டாம். ஆதலால் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு செயலை அதாவது ஒரு பகிரங்கமான அநீதி என்று தெரிந்த ஒரு விசயத்தில் நீதிக்கு மாற்றமாக அநீதிக்கு துணை போவதை ஒரு நாளும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான். நீங்கள் ஒருவர் மீது கொண்டு இருக்கும் வெறுப்பு அவர்கள் மீது நீதி செலுத்த உங்களுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்கிற திருக்குர்ஆன் ஆயத்தை இலங்கை முஸ்லிம்களுக்கு நினைவு படுத்தி இந்த வரலாற்று பிழையை விட்டு தவிர்ந்து கொள்ளுமாறு அல்லாஹ்வை கொண்டு எச்சரித்து விடை பெறுகிறேன்.

அன்புடன்: ஆசாத். நெல்லை தமிழ் நாடு இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக