ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

கட்டாய திருமண சட்டம் ஒரு ஆய்வு.

உலகலாவிய இசுலாமிய எதிர்ப்பு என்பதுதான் இந்த நூற்றாண்டின் முற்போக்கு சிந்தனை என வல்லரசு நாடுகளும், இந்தியா போன்ற அமெரிக்க அடிமை நாடுகளும் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான தொடர் தாக்குதல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிகழ்த்திய வண்ணம் உள்ளனர். உலக கொடுங்கோலன் ஜார்ஜ் புஸ், தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இஸ்லாமிய எதிர்ப்பினை இன்னொரு சிலுவை யுத்தம் என பிரகடனப்படுத்தி முடுக்கிவிட்ட பணி, இன்று உலகம் முழுவதும் அமெரிக்க நட்பு நாடுகளின் முதல் முக்கிய பணியாக செயல்படுத்தப்படுகிறது.

அமெரிக்க மற்றும் அடிமை நாடுகளில் ஒரு மதத்தினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் பேரழிவு வேலைகளை நியாயப்படுத்தும் விதமாக தீவிரவாத ஒடுக்குமுறை, நாட்டின் பாதுகாப்பு என்ற வேறு பெயர்களில் மனித உரிமைகள் மீறப்படுகிறது. இந்த பிரச்சாரங்களினால் நடுநிலையாளர்களையும், முற்போக்குவாதிகளையும் வெகுஜனங்களையும் தனது நிலை குறித்து நியாயப்படுத்துகின்றனர். இதற்காகவே உலகலாவிய செய்திகளும் தயாரிக்கப்படுகின்றது. இந்தத் தொடர் பிரச்சாரங்களால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வுகளை உற்பத்தி செய்து இசுலாமியர்களின் மேல் வெறுப்பு அலைகள் உருவாக்கப்படுகிறது. இசுலாமியர்களை மட்டும் தனி சோதனை எனும் பெயரில் பொது இடங்களில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தி மன அளவில் காயப்படுத்துவது என்பது அமெரிக்கா தொடங்கி இன்று எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புவி வெப்பமயமாதலை விட மிக முக்கிய அச்சுறுத்தலாக இசுலாமியப் பெண்கள் அணியும் புர்கா - பாரம்பரிய உடைகளை மேலை நாடுகள் தடை செய்கின்றன‌. புர்கா அணியும் பெண்கள் எல்லோருமே உடம்பில் வெடிகுண்டுடன் இருப்பவர்கள், தொப்பி, தாடி வைத்திருக்கும் ஆண்கள் எல்லோருமே தீவிரவாதிகள் என்பது போன்ற உணர்வினை மக்கள் மத்தியில் திட்டமிட்டே எல்லா ஊடகங்களும் செய்து வருகின்றன‌. ஒரு மதத்தைச் சார்ந்த குழந்தைகளின் அருகில் தங்கள் குழந்தைகளை அமர்த்த வேண்டாம் என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தில் கேட்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. பள்ளி குழந்தைகளிடம் கூட மதத்தின் பெயரால் பகைமை பாராட்டுவது என்பது எத்தனை இழிசெயல்.

இது ஒரு மதத்தவரை மட்டும் சமுக ஓட்டத்திலிருந்து பிரித்து அன்னியப்படுத்தும் முயற்சியாகும். அவர்களின் மத சம்மந்தப்பட்ட எந்த ஒரு அடையாளமும் சமுகத்தின் அச்சுறுத்தலாக கருத வைப்பது, அவர்களை சுய குற்றவுணர்வு உள்ளவர்களாக்கி ஒட்டுமொத்த மக்களின் பார்வையிலும் மிகவும் கீழ்த்தரமான‌வர்கள் என்ற நிலைக்கு உட்படுத்துவது தான் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நோக்கமாகும்.

இந்த முயற்சி இந்தியாவிலும் இந்துத்துவா எனும் உட்கருவுடன் நாட்டின் கட்டமைப்புகளில் எல்லா நிலைகளிலும் இசுலாமிய அழிப்பு வேலைகளை செய்து வருகிறது. அதை நம் நாட்டில் நடக்கும் போலி என்கவுண்டர்கள், ஆள்கடத்தல்கள், மதக்கலவரங்கள், வழிபாட்டு நிலையங்களை அபகரித்தல், நீதி மறுத்தல், இட ஒதுக்கீட்டில் புறக்கணித்தல், வாழ்வுரிமை மறுக்கப்படுதல் என ஒரு மதத்திற்கு எதிராக பல்முனை தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

இசுலாமியர்களின் சமுக உரிமைகளில் இந்திய நீதித் துறையின் நிலைபாடுகளும் பல இடங்களில் விஷ‌த்தைக் கக்குவதாகவே உள்ளது. "பிரதியும் சாவான், வாதியும் சாவான் ஆனால் வழக்கு மட்டும் தலைமுறை கடந்து நிலுவையில் இருக்கும்” என கேலி செய்யும் அளவிற்கு நாட்டில் எத்தனையோ லட்சம் வழக்குகள் நிலுவையில் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, சில நீதிபதிகள் எப்பொழுதாவது அரசுக்கு அறிவுரை கூறுவதும் உண்டு. அதில் ஒன்றுதான் கட்டாய திருமணச் சட்டம். ஏற்கனவே திருமணங்களைப் பதிவு செய்யும் இசுலாமிய சமுகத்தினர் இதை எதிக்கும் அவசியம் என்ன இதுவும் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் போலத்தானே என சில கற்றறிந்தவர்களும் கூறிவருகின்றனர்.

உண்மை தான் பிறப்பும், இறப்பும் எந்த ஒரு மாற்றம் இல்லாதது. ஒருவன் இந்த உலகத்தில் பிறந்து விட்டான் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை போல் ஒருவன் இந்த உலகத்தை விட்டு மரணித்தாலும் அதையும் யாராலும் மறுக்க முடியாது. இந்த இரண்டு விசயங்களுக்கும் கட்டாயப் பதிவுகள் இருப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் திருமண உறவுகளுக்கு பதிவு சட்டங்கள் என்பது அதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அவசரமாக சட்டம் அமுலாக்கப்பட்டதன் நோக்கத்தினையும் மனதில் கொண்டு யோசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த சட்ட அறிவுரைகளை உடனடியாக அமுல்படுத்திய மாநிலங்களில் முதன்மையானது இசுலாமியர்களைப் பொது எதிரியாய்க் கருதும் மோடியின் குஜராத் தான். இதில் தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த அவசர ஆர்வம் எனத் தெரியவில்லை.

ஒரினச்சேர்க்கைவாதிகளும் திருமணம் செய்துகொள்ளலாம் என சட்டம் இயற்றபடுகிறது. விரைவில் மிருகத்திற்கும் மனிதனுக்கும் திருமணம் செய்யலாம் எனவும் சட்ட்ங்கள் தீட்டலாம். ஆனால் மிகவும் பண்பாட்டுடன் மற்ற எல்லாருக்கும் முன் மாதிரியாய் நடக்கும் இசுலாமிய தனியார் திருமண சட்டத்தினால் பெரிய பேரிழப்பு வருவதுபோல கட்டாய பதிவுச் சட்டம் உடனடியாக அமுலாக்க வேண்டும் என்ற அவசர ஆர்வம்தான் ஏன்?

மணமகன், மணமகள், தாய், தந்தை சாட்சிகள், உறவுகள் என எல்லாரும் கூடி அரசு காஜியின் பதிவு ஒப்பந்தத்துடன் பதிவு செய்து நடத்தி வைக்கப்படும் ஒரு திருமணத்தை ஒரு சார்பதிவாளர் சரிபார்த்து இந்தத் திருமணம் செல்லும், செல்லாது என தீர்மானிக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? லஞ்சம், அலட்சியம், அதிகாரம் என ஊறிப்போய் உள்ள அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டால் என்னவாகும் நிலைமை? ஏற்கனவே போதிய கல்வி இல்லாத, பொருளாதாரத்தில் தாழ்வு நிலையில் இருக்கும் இசுலாமிய சமுகம் இதை எப்படி எதிர் கொள்ளும்?

திருமணமாகிய 90 நாட்களுக்குள் முறைப்படி திருமணச் சான்றிதழ் பெறவேண்டும், அப்படி இல்லையென்றால் அந்தத் திருமணம் செல்லாது என சார்பதிவாளரால் அறிவிக்கப்பட்டால், திருமணமாகிய 90 நாட்களில் புது தம்பதிகள் குடும்பம் நடத்தி, மணப்பெண்ணும் கருவை சுமக்கும் நிலையில், ஒரு பதிவாளர் இந்தத் திருமண உறவு செல்லாது எனக் கூறிவிட முடியுமா?

ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் சாதாரண‌மாக ஒரு ரேசன் கார்டு பதிய வேண்டும் என்றோ, இல்லை உறுப்பினர் நீக்கவோ, சேர்க்கவோ நாம் படும்பாடு நமக்குத்தான் தெரியும். ரேசன் கார்டில் ஆரம்பித்து, சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் என அரசு அலுவலகங்களுக்கு அலைந்து, அலைந்து நாம் ஒரு வழியாகிவிடும் சூழலில், போதாக்குறைக்கு திருமணப் பதிவு சட்டம் வேறு.

இப்பொழுது தாராள‌மாக சாட்சிக் கையெழுத்து போட முன்வரும் இசுலாமிய சமூகத்தார்கள் இந்த சட்டம் வருமேயானால் சாட்சி கையெழுத்துப் போட தயக்கம் காட்டுவார்கள். சார்பதிவாளர் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கும் வரைக்கும் மணமக்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து சாட்சி கையெழுத்துப் போட்டவனும் இது சரியில்லை, அது சரியில்லை என பதிவாளர் அலுவலகம் நோக்கி அழைய வேண்டிவரும்.

பெண் குழந்தைகள் அதிக விகிதாச்சாரம் உள்ள, வறுமை சூழலில் இருக்கும் சமுகம் திருமணப் பந்தங்களை மணமகன், மணமகளின் உடல் மன முதிர்சியின் அடிப்படையில் திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். இதில் சில நேரங்களில் அரசாங்கம் சொன்ன வயது வரம்பினை அடைவதற்கு முன்னமே திருமணங்கள் நடக்கும் சூழலும் உள்ளது. பொதுவாக அதிக பெண் குழந்தைகள் இருக்கும் வறுமையான குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் மற்ற பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு அரசு நிர்ணயம் செய்த திருமண வயதிற்கு முன்னமே திருமணம் செய்யும் பழக்கங்கள் மற்ற மதத்தினர் போலவே இசுலாமியர்கள் மத்தியிலும் உள்ளது.

கட்டாய திருமணப் பதிவு சட்டம் என்று கொண்டு வந்தால் அதன் மூலம் இது போன்று முடிந்த திருமணங்களை செல்லாது என அறிவித்து விடுமா? பலதார மணம் புரியும் இசுலாமியர்களுக்கு எத்தனை முறை பதிவுகள் நடக்கும்? பொது சட்டத்தினை ஏற்றுக் கொண்டு வாழும் இந்திய இசுலாமியர்கள் திருமணம், சொத்துரிமை, வாரிசு, மண விலக்கு, அனாதைகள் பேணுதல், பொது நிதி சம்பந்தபட்ட 10 வகையான விசயங்களில் மட்டும் இசுலாமிய தனியார் சட்டத்தினைப் பேணுகின்றனர்.

ஒரு இசுலாமியர்களின் தனிமனித ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையில் மட்டும் கடவுளின் சட்டங்கள் எனக் கருதும் இந்த 10 விதமான சட்டதிட்டங்களை சுமார் 1341 வருடங்களாக எந்த காலகட்டத்திலும் ஒரு சிறு மாற்றம் கூட இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவிற்கு முன்னதாகவே ஆங்கிலேயன் காலத்திலேயே இசுலாமியர்கள் அவர்கள் மத வழி தனியார் சட்டங்களை கடைபிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பிறகும் தனியார் சட்டங்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவும் இந்திய சட்டங்கள் இசுலாமியர்களுக்கு வழிவகை செய்துள்ளது.

இசுலாமியர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதுமாக இறைவனின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக வாழும் சூழலில் இது போன்ற திடீர் திடீர் தலையிடுகள், சட்ட மறுபரிசிலனை போன்றவைகள் தங்களின் மத உரிமைகள் அனைத்தையும் பறித்து பொது சிவில் சட்டம் என்ற நிலைக்குள் இட்டுச் சென்றுவிமோ என்ற அச்சம் இயல்பாகவே உள்ளது. இன்றைய சூழலில் இந்துத்துவா வர்க்கவாதிகளின் கோரிக்கையும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதேயாகும். அதன் பிரதிபலிப்புகள் சில சமயங்களில் பார்ப்பனிய‌ சாயம் உள்ள எல்லா கட்டமைப்புகளிருந்தும் இசுலாமிய எதிர்ப்பினை பல்வேறு முனைகளில் நடத்திக் கொண்டுள்ளது.

சுமார் 800 வருட இசுலாமிய ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரு இசுலாமியாரும் இல்லாமல் அழிக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் முதன் முதலில் இயற்றப்பட்ட சட்டமே திருமண சட்டம் தான். இதற்குப் பின்னர் 70 வருடங்களில் ஸ்பெயினில் ஒருவர் கூட இசுலாமி யர்களாய் இல்லை எனும் அளவிற்கு அந்த நாட்டிலிருந்து முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டனர். பார்ப்பன‌ ஆரியன் ஆள‌ப்போகும் அகண்ட பாரத கன‌விற்கு ஸ்பெயினை முன்னுதாரணம் எடுத்தால், இந்திய முசுலிம்களும் அதே ஸ்பெயினில் இருந்து படிப்பினை பெறத்தான் வேண்டும்.

கட்டாய திருமணச் சட்டம் இசுலாமிய கூட்டு சமுகத்தினை தகர்க்கும் முயற்சி. சாட்சிக்கு மட்டும் ஆளிருந்தால் போதும் பதிவாளர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என பள்ளிவாசலுக்கும் இசுலாமியனுக்குமான உள்ள தொடர்பை துண்டிக்கும் செயல். அரசியல் கட்டமைப்புகளில் எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒரு சமுகத்திற்கு ஜமாத் என்ற சமுக கூட்டமைப்பின் மூலமாகத்தான் ஒற்றுமையுடன் தங்களது வாழ்வுரிமைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்த கூட்டமைப்பும் தகர்க்கப்படுமானால் இசுலாமியர்கள் இந்த நாட்டில் முழுவதுமாய் சிதறடிக்கப்பட்டு, வாழத் தகுதியற்ற சமுகமாய் ஆகிவிடும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த இளைஞர்களால் நாடு அமைதியின்மையை எதிர்கொள்ள நேரலாம். இந்த அச்சம் மிகைபடுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், சம காலத்திய தொடர் நிகழ்வுகளின் ஒருங்கிணைந்த போக்கு இந்த அச்சங்களை உறுதிசெய்கிறது.

சட்டசபையில் இந்த சட்டம் கொண்டுவரும்போது அதை எதிர்த்து கருத்து சொல்லக்கூட முடியாத ஒரு சமுகமாகத்தான் இருந்தது. ஆனால் ஜமாத் எனும் சமுக கூட்டமைப்பின் தொடர் முயற்சியால் முதல்வர் அவர்கள் மறுபரிசீலனை செய்வதாக சமீபத்தில் கூறியுள்ளது சற்று ஆறுதலான செய்தியாகும். இசுலாமிய சமுகம் அரசியல்,அதிகார கட்டமைப்புகளுக்குள் நுழையாதவரை இது போல பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து சந்திக்க வேண்டிவரும்.

THANKS FOR: இராசகம்பீரத்தான் மால்கம் X.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

குளிர்கால ஒலிம்பிக்: ஹிஜாபுடன் கலந்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்மணி.


ஹிஜாப் எங்கள் வாழ்வின் எவ்வித முன்னேற்றத்திற்கும் தடையாக இல்லை என்பதை தங்களது சாதனைகள் மூலம் நிரூபித்து வருகின்றார்கள் முஸ்லிம் பெண்கள்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கி வருகிற பிப்ருவரி 28ஆம் தேதி வரை கனடா நாட்டின் வான்கோவரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பனிச்சறுக்குத் தொடர்பான பல போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஜியண்ட் ஸ்லாலோம் மற்றும் ஆல்பைன் ஸ்லாலோம் போட்டிகளில் ஈரான் நாட்டு சார்பாக ஹிஜாப் அணிந்துக் கொண்டே பங்கேற்கிறார் மர்ஜான் கல்ஹோர் என்ற முஸ்லிம் பெண். இவர் ஈரானின் சார்பாக கலந்துக் கொள்ளும் முதல் பெண்மணியாவார்.

ஈரான் சார்பாக துவக்க விழாவில் கொடியை ஏந்தி வந்தவரும் இவரே. 21 வயது மருத்துவ பட்டப்படிப்பு மாணவியான கல்ஹோர் கூறுகையில், "இந்த ஒலிம்பிக் எனது கனவாகும். எனது இந்த பங்கேற்பு ஈரானிய பெண்களை ஊக்குவிக்கும். பெரும்பாலான பெண்கள் பனிச்சறுக்கு போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் ஒரு முன்மாதிரியாக திகழ்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எனது தலைமுடியை மறைப்பதில் மிகவும் கவனமாக உள்ளேன். எனது தலைமுடி குட்டையானது. ஆதலால் ஒரு தொப்பியை அணிந்துள்ளேன். அதன்மேல் ஹெல்மட் அணிந்துள்ளேன்." என்கிறார் கல்ஹோர்.

விளையாட்டுப் போட்டிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துக் கொண்டு கலந்துக் கொள்வதற்கு மேற்கத்தியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தோல்வியடைந்த கொள்கைகள்

ஜெர்மனியின் இரண்டரை கோடி பேர் பின்பற்றும் பிராட்டஸ்டண்ட் திருச்சபையின் தலைவர், மார்கோட் கேஸ்மான், குடிபோதையில் வாகனம் ஒட்டியதை அடுத்து கைது செய்யப்பட்ட பின்னர், ஒரு பெரிய தவறை இழைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்த திருச்சபையின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்ட திருமதி கேஸ்மேன், ஹானோவர் நகரில் போக்குவரத்தை நிறுத்தும் சிகப்பு விளக்கை மீறிச்சென்றார்.
சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகம் மது அவரது இரத்தத்தில் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்த முதல் ஜெர்மன் ஆயர் என்ற நிலையை அவர் பெற்றிருந்தார்.இந்த சம்பவம் அவரது பதவியை எப்படி பாதிக்கும் என்பது குறித்து திருச்சபைத் தலைவர்கள் விவாதித்து வருகிறார்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2010

நன்மையை அதிகம் அதிகம் சம்பாதிக்க சிறந்த வழிகள்.

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

1) அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?:
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2) உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?:
யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3) அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?:
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4) அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?;
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

5) அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?:
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

6) ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?:
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

7) சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?:
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

8) அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?:
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9) உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?:
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

10) ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?;
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

11) மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?:
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

12) சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?:
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

13) அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?:
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)

14) நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?:
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

15) மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?:
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

16) சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?:
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

17) முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?:
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

18) ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?:
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

19) உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?:
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: ஒரு ஆய்வு கட்டுரை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், “ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு” எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

ஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்-காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது – இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் “நேடோ” கூட்டாளி நாடுகளும், தமது சபதங்களை நிறைவேற்றவும் வழியின்றி, அதே சமயம், ஆப்கானில் இருந்து கௌரவமாக வெளியேறவும் விருப்பமின்றி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன.

இப்படிபட்ட தருணத்தில், ஆப்கானுக்கு மேலும் 30,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பி இருக்கிறது, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அதனுடன், “இன்றிலிருந்து 18 மாதங்கள் கழித்து, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப் போவதாகவும்” ஒபாமா அறிவித்திருக்கிறார். இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போரை முன்னைவிடத் தீவிரமாக நடத்துவதற்கான முயற்சி என்பது பாமரனுக்கும் புரியும். ஆனால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் அல்லவா; அதனால், “ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக”த் தேன் தடவிப் பேசியிருக்கிறார், அவர். இந்த விளக்கத்தைக் கேட்கும் பொழுது கேப்பையில் நெய் வழிகிறது என்ற நம்மூர் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கான் ஆக்கிரப்புப் போருக்காக 2006-ஆம் ஆண்டு செலவழித்த தொகை ஏறத்தாழ 1,900 கோடி டாலர்கள் (95,000 கோடி ரூபாய்). இந்தப் போர்ச் செலவு 2009-இல் மூன்று இலட்சம் கோடி ரூபாயாக (6,020 கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகரித்திருக்கிறது. தற்பொழுது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் போர்ச் செலவு 10,000 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிடும் என மதிப்பிடப்படுகிறது.

வேலையையும் வீட்டையும் இழந்து, பொருளாதார நெருக்கடியால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அமெரிக்கர்களின் மத்தியில் இந்த ஊதாரித்தனமான போர்ச் செலவு ஆப்கான் போருக்கு எதிரான மனோநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புப் போரையும் போர்ச் செலவையும் நியாயப்படுத்த தேசிய வெறியைத் தூண்டிவிடும் அயோக்கியத்தனத்தில் இறங்கியிருக்கிறார், ஒபாமா. அமெரிக்காவை மீண்டும் தாக்கும் திட்டங்கள் போடப்படுவதாகக் கூறி, அமெரிக்கர்களின் மத்தியில் பீதியூட்டி வருகிறார், அவர். கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்ப எடுத்த முடிவை இராணுவத்தினர் மத்தியில் அறிவித்து, ஒபாமா உரையாற்றியதைக் கேட்டால், போர் வெறியன் ஜார்ஜ் புஷ் ஆவி ஒபாமாவுக்குள் புகுந்துவிட்டதோ என்ற சந்தேகம் தோன்றும்.

ஒபாமா அதிபரான பிறகு, துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே ஆப்கான் போரில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற போர்த் தந்திரத்தைக் கையாண்டு வந்தார். பொருளாதார நெருக்கடி நிலவும் சமயத்தில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், போர்ச் செலவு அதிகரித்து, ஏழை அமெரிக்கர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்; அது, தனது எதிர்கால அரசியல் நலனுக்கு நல்லதல்ல என்பதாலேயே இந்தப் போர்த் தந்திரத்தைக் கையாள எண்ணி வந்தாரேயன்றி, வேறெந்த நல்லெண்ணமும் காரணம் அல்ல.

இதற்கு மாறாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன், துருப்புகளின் எண்ணிக்கையைச் சற்று அதிகரிப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலை ஆப்கான் மீது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீதும் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கூறி வந்தார். அமெரிக்க அரசின் உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இராணுவச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதிகள் ஆகியோர் ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வந்தனர். துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு அமெரிக்காவின் பத்திரிகைகளும், குடியரசுக் கட்சியும், வலதுசாரி அறிவு ஜீவிகளும் ஆதரவு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக இந்த மூன்று அணிகளுக்கு இடையே ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரை எப்படி நடத்திச் செல்வது என்பது குறித்து நடந்து வந்த நாய்ச் சண்டையில், அதிபர் ஒபாமா தீவிர வலதுசாரி கும்பலிடம் சரணடைந்துவிட்டார்.

“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” என்ற போர்வையில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்புப் போர், தாலிபான் மற்றும் அல்-காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, குறிப்பாக ஆப்கான் மக்கள் மத்தியில் மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அமெரிக்கா, ஆப்கான் மீது படையெடுத்த ஐந்து வாரங்களுக்குள்ளாகவே தாலிபானின் அதிகாரம் காபூல் பகுதியில் வீழ்த்தப்பட்டாலும், அப்பொழுதே ஆப்கானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தும் அளவிற்கு, அப்பகுதியில் தாலிபான் செல்வாக்கு செலுத்தி வந்தது. இப்பொழுதோ, தாலிபானின் செல்வாக்கு ஆப்கானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வளர்ந்து வருவதாக முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ஒப்புக் கொள்கின்றன.

இதனால், தாலிபானைத் தோற்கடிப்பதைவிட, அவ்வமைப்பின் செல்வாக்கு தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் வளர்ந்துவிடாமல் தடுப்பதுதான் அமெரிக்காவிற்கும் அவர்களது கூட்டாளி நாடுகளுக்கும் தலைபோகிற விசயமாகிவிட்டது. இதற்காகவே துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, தாலிபானுக்கு எதிரான யுத்தப் பிரபுக்களோடு ஒரு புனிதக் கூட்டணியையும் அமெரிக்கா-நேடோ துருப்புகள் அமைத்துள்ளன. மேலும், தாலிபானை உடைத்து அமெரிக்காவிற்கு உதவக் கூடிய ‘நல்ல’தாலிபான்களை – கருங்காலிகளை- உருவாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட்டில் 130 கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தயவிலும், பாதுகாப்பிலும் ஆப்கானை ‘ஆண்டு’ வரும் ஹமித் கர்சாய் அரசோ, ஊழல்பேர்வழிகள், போதை மருந்து கடத்தும் அரசியல் தாதாக்கள், தாலிபானை எதிர்க்கும் யுத்தப்பிரபுக்களால் நிரம்பி வழிகிறது. ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் சொந்த சகோதரரான அகமது வாலி கர்சாய் ஆப்கானைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் பேர்வழிகளுள் முக்கியமானவர் எனும்பொழுது, ஆப்கானில் அமெரிக்கா திணித்துள்ள ஆட்சியின் யோக்கியதைப் பற்றி மேலும் விரிவாக விளக்கத் தேவையில்லை. “அகமது வாலி கர்சாயின் போதை மருந்து கடத்தல் தொழிலை மேற்குலக பத்திரிகைகள் அம்பலப்படுத்தத் துணிந்தால், நேடோ-அமெரிக்கத் துருப்புகளுக்கும் அதில் பங்கு இருப்பதை அம்பலப்படுத்துவேன்” என அந்நாட்டின் போதை மருந்து கடத்தல் தடுப்பு அமைச்சரே எச்சரிக்கும் அளவிற்கு ஆப்கானில் போதை மருந்து கடத்தல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆப்கான் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான யுத்தப் பிரபுவாகக் கருதப்படும் முகம்மது ஃபஹிம்தான் அந்நாட்டின் துணை அதிபர். உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த மற்றொரு யுத்தப் பிரபுவான ரஷித் தோஸ்தம் அதிபர் கர்சாயின் நெருங்கிய அரசியல் கூட்டாளி. பஷ்டுன் இன மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்க-நேடோ துருப்புகளுக்குத் தேவைப்படும் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை யுத்தப் பிரபுக்கள்தான் செய்து கொடுத்து, சன்மானம் பெற்றுக் கொள்கிறார்கள். போதை மருந்து கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் யுத்தப் பிரபுவான நஸ்ரி முகமது, ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வருவதை அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக கூட்டுறவு மையம் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆப்கானில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக நடந்த அதிபர் தேர்தலில் ஹமித் கர்சாய்க்கு விழுந்த வாக்குகளில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குகள் கள்ள வாக்குகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் கர்சாய் அடைந்த “வெற்றி”, பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கர்சாய் இரண்டாம் சுற்றுத் தேர்தலைச் சந்திக்காமலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயவால் மீண்டும் நாட்டின் அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார். பாலஸ்தீனத்தில் அமெரிக்காவை எதிர்க்கும் ஹமாஸ் இயக்கம் நியாயமான முறையில் தேர்தலைச் சந்தித்து, காசா முனையில் வெற்றி பெற்றதை இதுவரை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், ஆப்கானில் நடந்த மோசடித் தேர்தலையும், ‘சட்டவிரோதமான’ முறையில் கர்சாய் மீண்டும் அதிபராகியிருப்பதையும் எவ்வித முணுமுணுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளன.

அந்நிய ஆக்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் நேடோ படைகள் நடத்திவரும் படுகொலைகள் – கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 31,000 ஆப்கானியர்கள் ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் – கர்சாயின் ஊழல் ஆட்சி, ஐ.நா. மன்றம் போடும் சோத்துப் பொட்டலத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அளவிற்கு உள்நாட்டுப் பொருளாதாரம் நாசமாகிக் கிடப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்கான் மக்கள் மத்தியில் தாலிபானின் செல்வாக்கு மீண்டும் வளரத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா இப்பொழுது இதனையே காரணமாகக் காட்டி துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும்; அல்-காய்தாவை ஒழிக்க பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகள் மீதும் தீவிரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுக்க வேண்டும் எனக் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது.

ஆப்கானில் அமெரிக்க-நேடோ படைகள் சந்தித்துவரும் தோல்வியையும், அங்கு நிலவும் உள்நாட்டுக் குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்ற பெயரில் ரசிய ஏகாதிபத்தியமும், சீனாவும் அந்நாட்டினுள் நுழைய முயன்று வருகின்றன. இந்தியா, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானை ஓரங்கட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மட்டுமின்றி, கர்சாய் கும்பலுக்கும், தாலிபானை எதிர்க்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், ஆப்கானைப் புனரமைப்பது என்ற போர்வையில் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவைப்படும் கள உதவிகளைச் செய்து கொடுத்தும் வருகிறது, இந்தியா. பாகிஸ்தானோ ஒருபுறம் அமெரிக்காவிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இன்னொருபுறம் தாலிபானுக்குக் கொம்பு சீவிவிடுகிறது. இப்படியாக ஆப்கான், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் வேட்டைக் காடாக மாற்றப்பட்டுள்ளது.

இரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும், மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லுவதற்கான தரைமார்க்கமாகவும் இருப்பதாலும், ஆப்கான் நாட்டைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. இந்த நிலையில் அதிபர் ஒபாமா பதினெட்டு மாதங்கள் கழித்து ஆப்கானில் இருந்து படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக் கொள்வார் என நம்புவதற்கு இடமே கிடையாது. 19 -ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏகாதிபத்தியமும், 20-ஆம் நூற்றாண்டில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் ஆப்கான் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதைப் போல், அமெரிக்க மேலாதிக்க வல்லரசும் தோற்கடிக்கப்பட்டதால்தான், அதற்குப் படைகளைத் திரும்பப் பெறும் “நல்ல புத்தி” வரும்!

அன்பு இறைவன் கொடுத்த ஒரு அருட்கொடை.

செல்லப் பிராணிகள் பலருக்கு இருப்பதுண்டு. ஆனால் கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த சிடோ (Chito) என்றழைக்கப்படும் கில்பர்ட்டோ ஷெட்டென் Gilberto Shedden என்ற மீனவனுக்குச் செல்லப் பிராணி எது தெரியுமா? பதினேழு அடி நீளமுள்ள ஒரு முதலை தான். 52 வயதான சிடோ தண்ணீரில் அந்த பெரிய முதலையுடன் கட்டிப் பிடித்து விளையாடுவது கண் கொள்ளாக் காட்சி.

சுமார் இருபது வருடங்களுக்கு ஒருநாள் முன் பரிஸ்மினா என்ற நதியில் படகை ஓட்டிச் செல்லும் போது குற்றுயிராகக் கிடந்த அந்த முதலையை சிடோ கண்டார். அதன் இடது கண்ணில் யாரோ துப்பாக்கியால் சுட்டிருந்தார்கள். படுகாயமுற்றிருந்த அந்த முதலை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அவருக்கு விலங்குகள் மீது தனி அன்பு உண்டு. அதுவும் காயமுற்று உள்ள விலங்குகள் மீது அன்புடன் இரக்கமும் அதிகம். எனவே சிடோ இரக்கப்பட்டு அந்த முதலையைக் காப்பாற்ற நினைத்தார். அந்த முதலையை இழுத்து தன் படகில் போட்டுக் கொள்ள அவர் ஒருவரால் முடியவில்லை. நண்பர்களின் உதவியுடன் அந்த முதலையை இழுத்து தன் படகில் போட்டுக் கொண்டார்.

அதற்கு சிகிச்சை தந்து உணவும் தந்து ஆறு மாத காலம் சிடோ நன்றாகப் பார்த்துக் கொண்டார். அது பலவீனமாக இருந்த சமயங்களில் இரவு அதனுடனே படுத்துக் கொண்டார். ”அதற்குத் துணையாக நான் இருக்கிறேன் என்று உணர்த்த ஆசைப்பட்டேன். எல்லா மனிதர்களும் அதற்கு எதிரிகள் அல்ல என்று தெரியப்படுத்த விரும்பினேன்”

அந்த முதலைக்கு போச்சோ ( Pocho) என்று பெயரிட்டு அதன் காயம் குணமாகி உடல்நலம் முன்னேறும் வரை சிடோ அதனுடையே இருந்தார். பின் அதனை அவர் வீட்டருகே இருந்த குளத்தில் கொண்டு போய் விட்டார். அதை விட்டு விட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தவர் சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பிப்பார்த்த போது அந்த முதலையும் அவர் பின்னால் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவர் மனம் நெகிழ்ந்து போனார். சிறிது நாட்களில் அவர் அதனைப் போச்சோ என்று அழைத்தவுடன் அது உடனே அவரருகே வரக் கண்டார். சிறிது சிறிதாக அதனுடன் உள்ள நட்பு அதிகமாகியது. அதனுடன் நெருக்கமாக விளையாட்டுகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.

”போச்சோ எனது நண்பன். அவனை நான் அடிமை போல நடத்த விரும்பவில்லை” என்று சொல்லும் சிடோ அந்த முதலையிடம் பாராட்டும் அந்த அன்பு காண்பவர்களை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தனை நெருக்கமாக இருந்தும் அந்த சக்தி வாய்ந்த முதலையும் தன் நண்பனுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதும் அதிசயமே அல்லவா?

மதம், மொழி, இனம், நாடு கடந்தும் அன்பு அனைவராலும் உணரப்படும் மொழியாகவும் மனிதர்களைப் பிணைக்கும் மேன்மையான பந்தமாகவும் இருக்கிறது. அது மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல் முதலை, போன்ற கொடிய விலங்குகளைக் கூட மனிதர்களுடன் பிணைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

சண்டை சச்சரவு, போர், பிரிவினைகள் முதலான எல்லா சமூக நோய்களும் பெருகி வரக் காரணமே அதற்கெல்லாம் அருமருந்தான அன்பு நம்மிடையே குறைந்து வருவது தான். கொடிய விலங்குகளைக் கூட நம்முடன் இணைந்து வாழ வைக்க முடியுமென்றால் மனிதர்களாகிய நாம் பிரிந்து நின்று இந்நோய்களுக்கு இரையாகி மடிவதேன்?

சிந்திப்போமா?

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காதலர் தினம் ஒரு ஆய்வு.


மேற்குலகம் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்த கலாச்சாரச் சீரழிவுதான் காதலர் தினமும், அதுத்தொடர்பான கொண்டாட்டங்களும்.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தினங்களில் சர்வதேச சமூகத்தின் அவல நிலையை எடுத்தியம்பும் முகமாக மனித உரிமைகள் தினம், சித்திரவதை எதிர்ப்பு தினம், பெண்கள் தினம், பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினம், குழந்தைகள் தினம் என பல்வேறு தினங்கள் நினைவுக் கூறப்படுகின்றன. இவற்றிற்கு ஒரு பின்னணி உண்டு, அதில் ஒரு பொருளும் உண்டு. ஆனால் காதலர் தினத்திற்கு பின்னணி வேலண்டைன் என்ற கிறிஸ்தவ மதப்போதகரின் வாழ்வியல் சம்பவம் நினைவுக் கூறப்படுகின்றதேயொழிய அதில் எத்தகைய சமூக பின்னணியும் இல்லை என்பதோடு காதலர் தினத்தின் முக்கிய நோக்கமே கலாச்சார சீரழிவும், வியாபார யுக்திகளும்தான் என்பது தெளிவாகவே புலப்படுகிறது.

மேற்குலகம் மனித சமூகத்திற்கு அன்பளிப்பாக அளித்த கலாச்சாரசீரழிவுதான் காதலர் தினம். மேற்கத்திய உலகம் கலாச்சாரசீரழிவுடன் நோய்களையும் ஏற்றுமதிச்செய்கிறது.அந்த நோய்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் சில மருந்துகளை வெளியிட்டு பாதிக்கப்பட்டவனின் பொருளாதாரத்தை உறிஞ்சவும் செய்கிறது. சாமுல் ஹண்டிங்டனின் நாகரீக மோதலின் தியரி இங்கு மாறுபடவேச் செய்கிறது..

காதல் அன்பு நேசம் போன்ற மனித உணர்வுகள் எல்லாம் மேற்குலகின் உபாயத்தால் கடைச் சரக்காக்கப்பட்டுவிட்டது. இரு உள்ளங்களுக் கிடையேயான காதலைத்தான் இவர்கள் கடற்கரைகளிலும், இரவு விடுதிகளிலும், டிஸ்கோத்தேக் கிளப்புகளிலும், சீமைச்சாராய ஷாப்புகளிலும் கடை விரிக்கின்றார்கள். காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறது.

ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவிக்கிறார். காதலர் தினத்தையொட்டி சில சலுகைகளையும் மிக்லானியின் நிறுவனம் அறிவித்துள்ளதாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆணுறைகளை வாங்கினால் இலவசமாம். மேலும் வேல்யூ ஆடட் பேக்கேஜ்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு ஆணுறை வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல.இந்தியாவில் பூ விற்பனையாளர்கள் காதலர் தினத்தில் 15 கோடி வரையிலான வியாபாரத்தை எதிர்பார்க்கிறார்களாம்.

அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர் விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு வியாபாரமயமாக்கப்பட்டு விட்டது காதல்.

இன்று கண்டதும் காதல், காணாத காதல் என்றெல்லாம் காதலை வகைப்படுத்துகிறார்கள்.இதில் வேறு அமிலக்காதல் என்கிறார்கள்(தான் விரும்பும் பெண் தன்னைவிரும்பாமல் வேறொருவரை திருமணம் செய்ய முற்படும்பொழுது அவள் முகத்தின் மீது ஆசிட்டை வீசுவது, இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன)இதற்கு சினிமா என்ற பெருந்திரள் ஊடகமும் முக்கிய பங்கை ஆற்றுகிறது. திரைப்படம் காட்டும் காதலில் காமமும், ஆணாதிக்கமுமே நிறைந்துக் காணப்படுகிறது. அதில் பெண் வெறும் போகப்பொருளே. இதனைத்தான் இன்றைய சமூகம் நிதர்சனத்திலும் செயல்படுத்த முயல்கின்றது. பெண் என்பவள் பொருளை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் use and throw போன்று ஆக்கப்படுகிறாள். இவையெல்லாம் காதல் ஆகுமா? நிச்சயம் இல்லை சதை மீதான உணர்ச்சி என்றே கூறலாம்.

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் காவலர்களாக தங்களை காட்டிக் கொண்டு காதலர் தினக் கொண்டாட்டங்களை தடுக்க வன்முறையில் இறங்கும் இந்திய பாசிஸ்டுகளின் உண்மையான நோக்கம் பண்பாடும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. காதலர் தினத்தின் பின்னணியில் கிறிஸ்தவ பாதிரியார் வேலண்டைன் ஒளிந்திருக்கிறார் என்பதேயாகும். மேலும் ஆண்டின் 365 நாட்களிலும் இவர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் திருவிழாக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும்தான். கலாச்சாரத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் தங்களின் வழிப்பாட்டுத் தலங்களில் பொறித்து வைக்கப்பட்டிருக்கும் ஆபாசத்தையும்,வக்கிரத்தையும் தூண்டும் சிலைகளையும், ஓவியங்களையும் அகற்ற முற்படாதது ஏன்? ஏன் இவர்களே பாலியல் பலாத்காரத்திலும், வன்புணர்ச்சியிலும் கைதேர்ந்த கொடூரர்கள் என்பது குஜராத் இனப்படுகொலை உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கெதிராக நடைபெற்ற கலவரங்களிலும் தெளிவான ஒன்று. இவர்கள் சார்ந்த மதம்தான் பெண்களின் உணர்ச்சிகளை ஊமையாக்கி வரையற்ற சுரண்டல்களை பெண்கள் மீது திணிக்கிறது. ஆகவே இவர்களுக்கு கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் என்றுக் கூறுவதற்கு அருகதை துளியும் கிடையாது.

காதலைப் பொறுத்தவரை அது இயற்கையாகவே மனித உள்ளங்களில் எழும் ஒன்று. அது உடல் இச்சையை மட்டும் சார்ந்தது அன்று. காதல் என்பது இணைகளுக்கிடையே பரஸ்பர அன்பு, பாசம், அரவணைப்பு, ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளல், உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், இன்பத்திலும், துன்பத்திலும் உறுதுணையாகயிருத்தல், ஒருவருக்கொருவர் ஆறுதல்,பரஸ்பர நம்பிக்கை இவையெல்லாவற்றையும் இறுதிவரை பேணுவதே காதலின் உள்ளார்த்தமாகும்.

இந்த காதலுக்குதான் இஸ்லாம் திருமணம் என்ற உறுதியான ஒப்பந்தம் என்ற அந்தஸ்தை அளித்து கெளரவப்படுத்துகிறது. அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் அத்தியாயம் இவ்வாறு குறிப்பிடுகிறான். "இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன"(அல்குர்ஆன் 30:21).

காதலுடன் வாழும் அந்த இணைகளை அல்லாஹ் இவ்வாறு உருவகப்படுத்துகிறான், "அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்..."(அல்குர்ஆன் 2:187)

காதல் என்பது காண்பவற்றிலெல்லாம் மோகம் கொள்வதன்று. எந்த இணையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டோமோ அதில் திருப்திக் கொண்டு வாழ்வதாகும்.அதனால் வல்ல இறைவனான அல்லாஹ் இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான்.

ஆண்களானாலும் பெண்களானாலும் அவர்களுக்கு இவ்வுலகில் ஒரு உன்னத பணிகள் உண்டு அதனைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு எடுத்தியம்புகிறது. "முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்"(அல்குர்ஆன்.9:71)

இஸ்லாம் என்ற உன்னத கொள்கையை பின்பற்றுபவர்கள் இத்தகய உணர்ச்சிகளின் சீர்கேட்டிற்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளமாட்டார்கள். இவ்வுலகில் இஸ்லாம் என்ற ஒப்பற்ற கொள்கையால்தான் ஒழுக்கத்தை நிலைநாட்ட இயலும். ஏனெனில் இறைவனின் இறுதித்தூதர் அவர்கள் தான் தூதராக அனுப்பப்பட்ட நோக்கத்தை இவ்வாறு தெரிவிக்கின்றார்கள், "நல்லொழுக்கத்தை பரிபூரணப்படுத்தவே நான் தூதராக அனுப்பப்பட்டேன்" என்று. ஆகவே இளம் தலைமுறையினரே! காதலின் பெயரால் கலாச்சாரத்தை கருவறுப்பதை விட்டொழித்துவிட்டு வாருங்கள் அந்த நல்லொழுக்கத்திற்கு வழிகாட்டும் நன்மையின் மார்க்கத்தை நோக்கி.

புதன், 10 பிப்ரவரி, 2010

2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக டாக்டர்.ஜாஹிர் நாயக்.


புதுடெல்லி:பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரபல நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் 7 முஸ்லிம்களும் இடம் பிடித்துள்ளனர். டாக்டர் ஜாஹிர் நாயக் 89வது இடத்தை பிடித்துள்ளார்.ஆனால் இந்துமத குருவாக கருதப்படும் பாபா ராம்தேவிற்கு 99-வது இடமும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு 100-வது இடமுமே கிடைத்துள்ளது. இந்தப்பட்டியல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசின் துணை ஏடான சண்டே எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்படுள்ளது.

இதர முஸ்லிம்கள் பிடித்துள்ள தரவரிசை வருமாறு:காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஹ்மத் பட்டேல்(10-வது இடம்). ஏ.ஆர்.ரஹ்மான்(31-வது இடம்), அமீர்கான்(39-வது இடம்), ஷாருக்கான்(47-வது இடம்), உமர் அப்துல்லாஹ்(57-வது இடம்), அஸீம் பிரேம்ஜி(60-வது இடம்). 100 சக்தி வாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் 89-வது இடத்தைப் பெற்றிருக்கும் ஜாஹிர் நாயக்கிற்கு 44-வயது ஆகிறது. 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆன்மீக தலைவர்கள் பட்டியலில் டாக்டர் ஜாஹிர் நாயக் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரையும் முந்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஜாஹிர் நாயக் சமீபத்தில் வெளியான உலகை அதிகம் ஈர்த்த 500 முஸ்லிம்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அமெரிக்காவிலிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

டாக்டர் ஜாஹிர் நாயக்கைப் பற்றி சண்டே எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது. "சூட் கோட்டை அணிந்து ஆங்கிலத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இவாஞ்சலிஸ்ட் ஜாஹிர் நாயக் சக்தி வாய்ந்த பேச்சாளர். இவரது உரையை இவர் நிறுவியுள்ள Peace TV யின் வாயிலாக 125 நாடுகளைச்சார்ந்த 100 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள். கடந்த ஆண்டு வட அமெரிக்காவிலும் Peace TV தனது ஒளிபரப்பை துவங்கியது. இவ்வலைவரிசையின் உருது சானலை 50 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள்.

கடந்த 14 ஆண்டுகளில் இவர் 1300 பொதுநிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தியுள்ளார். இதில் 100 உரைகள் கடந்த 2009 ஆம் ஆண்டிலாகும். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடைபெற்ற Peace Conference இல் 10 லட்சம் மக்கள் கலந்துக்கொண்டனர். டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை மட்டும் கேட்க 2 லட்சம் மக்கள் கூடினர். இதில் மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீமும் உட்படுவார். இந்த ஆண்டு டிசம்பரில் Peace TV பெங்காளி மொழியில் அலைவரிசையைத் துவக்குகிறது. செய்திச்சானல்களை 2012 அல்லது 2013 ஆண்டுல் துவக்கும்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இஸ்லாத்தை ஏற்ற ஆப்பிரிக்க குத்துச்சண்டை வீரர்கள்.


விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் தங்களது சாதனைகளின் மூலம் மக்களின் இதயங்களை கவர்வது வாடிக்கை.ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை இஸ்லாமிய நெறி கவர்ந்து ஈர்த்ததால் இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டிக்காக வருகை தந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் இஸ்லாத்தை இதய பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தானிய குத்துச்சண்டைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வந்த 6 பேரும் காமரூன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரும் முஃப்தி முஹம்மது நயீம் கலீமா சொல்லிக் கொடுக்க 9 வீரர்களும் முஸ்லிம்களாக மாறினர். அனைத்து விளையாட்டு வீரர்களும் பாரம்பரிய இஸ்லாமிய உடைகளை அணிந்து இருந்தது நெகிழ்ச்சியடைய செய்த நிகழ்ச்சியாக நடைபெற்றதாகவும் பாகிஸ்தானிய குத்துச்சண்டை கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் 9 பேருக்கும் இஸ்லாமிய பெயர் சூட்டப்பட்டது.

அலி அக்பர், முஹம்மது அலி, தைமூர் ஹுஸைன், ஃபசுர் ரஹ்மான், இக்பால் ஹுஸைன், முஹம்மது அக்ரம், முஹம்மது சமி, முஹம்மது யாசிர், முஹம்மது அர்ஷக் என இனி இவர்கள் அழைக்கப்படுவார்கள். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் குத்துசண்டைக் கழக சேர்மன் முஸ்லிம் உம்மாவில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் குத்துச்சண்டைக் கழக துணைத் தலைவர் இக்பால் ஹுஸைன் தெரிவிக்கிறார்.

பிற நாடுகளை விட முஸ்லிம் நாடுகளில் தங்களுக்கு கிடைத்த கண்ணியமும் விருந்தோம்பலும் முஸ்லிம்களின் அன்றாட வழிபாட்டு முறைகளும் தங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்ததாக குத்துச்சண்டை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

சுவிஸ்: மினாரா எதிர்ப்பு பிரச்சாரகர் இஸ்லாத்தை தழுவினார்.

ஸ்டாக்ஹோம்:சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.

மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியவர்தான் ஸ்ட்ரீக். இவர் சுவிஸ் பீப்பிள்ஸ் பார்டியின் முக்கிய நபர்.மினாராக்கள் கட்டுவதை எதிர்த்த அரசியல் தலைவர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியது சுவிஸ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்தார்.

தற்ப்போது சுவிஸ் நாட்டில் 4 மஸ்ஜிதுகளே உள்ளன. ஐந்தாவது மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டுவது தானாக வேண்டுமென்பது ஸ்ட்ரீக்கின் விருப்பமாகும். மதரீதியான பொறுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பிரச்சாரகராக தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவிக்கிறார்.

ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தை குறித்து புரிந்துக்கொள்ள விருப்பமுண்டு என்று முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான ஒ.பி.ஐயின் தலைவர் அப்துல் மஜீத் அல்தாயி தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறும்போது "சிலர் ஸ்ட்ரீக்கைப் போல் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிய முயற்சிக்கின்றனர். இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ட்ரீக் குர்ஆனை படித்தார். குர்ஆனை ஆழமாக சிந்தித்த போது முடிவு எதிர்மறையாக மாறியது".என்றார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

திரு குர்ஆனிலிருந்து பிராத்தனைகள்.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201

-------------------------------------------------------------------------------------

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286

-------------------------------------------------------------------------------------

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்!3:8