திங்கள், 15 பிப்ரவரி, 2010

அன்பு இறைவன் கொடுத்த ஒரு அருட்கொடை.

செல்லப் பிராணிகள் பலருக்கு இருப்பதுண்டு. ஆனால் கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த சிடோ (Chito) என்றழைக்கப்படும் கில்பர்ட்டோ ஷெட்டென் Gilberto Shedden என்ற மீனவனுக்குச் செல்லப் பிராணி எது தெரியுமா? பதினேழு அடி நீளமுள்ள ஒரு முதலை தான். 52 வயதான சிடோ தண்ணீரில் அந்த பெரிய முதலையுடன் கட்டிப் பிடித்து விளையாடுவது கண் கொள்ளாக் காட்சி.

சுமார் இருபது வருடங்களுக்கு ஒருநாள் முன் பரிஸ்மினா என்ற நதியில் படகை ஓட்டிச் செல்லும் போது குற்றுயிராகக் கிடந்த அந்த முதலையை சிடோ கண்டார். அதன் இடது கண்ணில் யாரோ துப்பாக்கியால் சுட்டிருந்தார்கள். படுகாயமுற்றிருந்த அந்த முதலை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அவருக்கு விலங்குகள் மீது தனி அன்பு உண்டு. அதுவும் காயமுற்று உள்ள விலங்குகள் மீது அன்புடன் இரக்கமும் அதிகம். எனவே சிடோ இரக்கப்பட்டு அந்த முதலையைக் காப்பாற்ற நினைத்தார். அந்த முதலையை இழுத்து தன் படகில் போட்டுக் கொள்ள அவர் ஒருவரால் முடியவில்லை. நண்பர்களின் உதவியுடன் அந்த முதலையை இழுத்து தன் படகில் போட்டுக் கொண்டார்.

அதற்கு சிகிச்சை தந்து உணவும் தந்து ஆறு மாத காலம் சிடோ நன்றாகப் பார்த்துக் கொண்டார். அது பலவீனமாக இருந்த சமயங்களில் இரவு அதனுடனே படுத்துக் கொண்டார். ”அதற்குத் துணையாக நான் இருக்கிறேன் என்று உணர்த்த ஆசைப்பட்டேன். எல்லா மனிதர்களும் அதற்கு எதிரிகள் அல்ல என்று தெரியப்படுத்த விரும்பினேன்”

அந்த முதலைக்கு போச்சோ ( Pocho) என்று பெயரிட்டு அதன் காயம் குணமாகி உடல்நலம் முன்னேறும் வரை சிடோ அதனுடையே இருந்தார். பின் அதனை அவர் வீட்டருகே இருந்த குளத்தில் கொண்டு போய் விட்டார். அதை விட்டு விட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தவர் சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பிப்பார்த்த போது அந்த முதலையும் அவர் பின்னால் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவர் மனம் நெகிழ்ந்து போனார். சிறிது நாட்களில் அவர் அதனைப் போச்சோ என்று அழைத்தவுடன் அது உடனே அவரருகே வரக் கண்டார். சிறிது சிறிதாக அதனுடன் உள்ள நட்பு அதிகமாகியது. அதனுடன் நெருக்கமாக விளையாட்டுகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.

”போச்சோ எனது நண்பன். அவனை நான் அடிமை போல நடத்த விரும்பவில்லை” என்று சொல்லும் சிடோ அந்த முதலையிடம் பாராட்டும் அந்த அன்பு காண்பவர்களை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தனை நெருக்கமாக இருந்தும் அந்த சக்தி வாய்ந்த முதலையும் தன் நண்பனுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதும் அதிசயமே அல்லவா?

மதம், மொழி, இனம், நாடு கடந்தும் அன்பு அனைவராலும் உணரப்படும் மொழியாகவும் மனிதர்களைப் பிணைக்கும் மேன்மையான பந்தமாகவும் இருக்கிறது. அது மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல் முதலை, போன்ற கொடிய விலங்குகளைக் கூட மனிதர்களுடன் பிணைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

சண்டை சச்சரவு, போர், பிரிவினைகள் முதலான எல்லா சமூக நோய்களும் பெருகி வரக் காரணமே அதற்கெல்லாம் அருமருந்தான அன்பு நம்மிடையே குறைந்து வருவது தான். கொடிய விலங்குகளைக் கூட நம்முடன் இணைந்து வாழ வைக்க முடியுமென்றால் மனிதர்களாகிய நாம் பிரிந்து நின்று இந்நோய்களுக்கு இரையாகி மடிவதேன்?

சிந்திப்போமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக