புதன், 3 மார்ச், 2010

பெண் சிசுவதை பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை.

பெண் சிசுவதை என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரை, வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்து விட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையானவளும் என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று வினவப்படும் போது.. (அல் குர்ஆன்: 82: 8,9)

இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அந்த இஸ்லாமியச் சமூகமக்கள் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டிற்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த கொடூரமான கொலை பாதகச் செயலைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.

அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறி, தான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி கால முழுவதும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

பெண்ணுரிமை போற்றிய பெருமானார்(ஸல்) அவர்கள்

பெண் குலத்திற்கு பெருமைச் சேர்த்த இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? என்று எதிர்பார்த்து வாழும் நிலைக்கு பெண்களின் புகழை பன்மடங்கு உயர்த்தி விட்டார்கள். அரபு மொழி பேசும் இஸ்லாமிய நாடுகளில் பெண்குழந்தையை பெருமைபடுத்தும் காட்சிகளை, தனக்கு பெண் குழந்தை பிறப்பதை பெருமையாக கருதும் நிலையை அங்கு பணிபுரியும் இந்தியர்கள் இன்றும் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த உயர் நிலை அவர்களிடையே எவ்வாறு ஏற்பட்டது? பெண்ணினத்தை மதிக்க அந்த மக்களுக்கு கற்றுத்தந்தது எது? அந்த அறியாமைக் காலத்து மக்கள் மிகக்குறைந்த நாட்களில் மனம் மாற்றம் அடைவதற்கு எது காரணமாக அமைந்தது? அதற்கெல்லாம் பின் வரும் நபி மொழி பதிலாக அமைகிறது.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு கொடுக்க என்னிடம் கிடைக்கவில்லை. ஆகவே அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே, அதனை இரண்டாக பங்கிட்டு தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்று விட்டார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்று கூறினார்கள். நூல்: புஹாரி

இந்த நபிமொழியைக் கேட்ட ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? அதனை மனம் நோகாமல் சீராட்டி, சிறப்பாக வளர்க்க வேண்டும், அதற்கு பரிசாக இறைவனிடத்தில் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரவு பகலாக கனவு காண ஆரம்பித்து விட்டார்கள். பெண் குலத்தின் பெருமைக்கும், சிறப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் அமைந்துள்ள பின் வரும் இன்னொரு நபி மொழியைப் பாருங்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது குடும்பத்திற்கு (மனைவிக்கு) சிறந்தவனாக விளங்குகிறாரோ அவரே சிறந்தவராவார். எனது குடும்பத்திற்கு நான் சிறந்தவனாக விளங்குகிறேன். (நூல்) திர்மிதி, இப்னு ஹிப்பான்.

இந்த நபிமொழியில் ஒரு ஆண்மகன் சிறந்தவனாக கருதப்படுவதற்கு அளவுகோலாக தனது மனைவியிடத்தில் நல்ல நடைமுறை கடைபிடித்து, அவளின் மதிப்பிற்குரிய சிறப்பான கணவனாக திகழவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு ஆறாத மனவேதனை தரும் சிசுவதை செய்வதற்கு அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட எந்த ஆண் மகன் துணிவான்? சிந்தித்துப் பாருங்கள். .

பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து, தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இவர்களது ஆசைப்படி ஆண்குழந்தையே அனைவருக்கும் பிறந்தால் என்ன பின் விளைவுகள், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. அதனால் பிஞ்சு குழந்தைகளை கொல்லும் பாவிகள் மனம் திருந்தி தூய மார்க்கமாகிய இஸ்லாத்தை அறிந்து தங்களை தூய்மை படுத்திக்கொள்ளவும், மறுமையில் இறைவனிடம் வெற்றி பெற்றவர்களாக ஆகா, இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள, வல்ல இறைவனிடம் துவா செய்வோம் ஆமீன்.

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையானவளும் என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று வினவப்படும் போது.. (அல் குர்ஆன்: 82: 8,9)//

    81:8,9.

    திருத்தி கொள்ளவும்.

    பதிலளிநீக்கு