சனி, 30 ஜூலை, 2011

இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம்.


இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர். இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம். இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.


ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல். இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார். கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை “வலீத்” என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால் “புதிதாக பிறந்தவன்” என்று பொருள்.
பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.

தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்து லில்லாஹ்… சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக…ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக